தமிழ்த் தேசியவாதி

Friday, July 14, 2006

உலகின் கோட்பாடும் தமிழரின் நிலைப்பாடும்.

கடந்த வருடம் எழுதப்பட்ட இந்த விடயம் காலத்தின் தேவை கருதி மீண்டும் ஒரு முறை....

தமிழ்தேசிய விடுதலைப் போராட்டம், சர்வதேச ரீதியில் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய மற்றுமொரு சூழல் உருவாக்கம் பெற்றுள்ளது.
பயங்கரவாதத்திற்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் சரியான வரைவிலக்கணத்தை வகுக்காத சர்வதேச சமூகம், சூழலுக்கு ஏற்ப எது தனக்கு சாதகமாக அமைகிறதோ அதற்க்கேற்றவாறு தனது நகர்வினை மேற்கொள்கிறது.
பல சுதந்திர விடுதலைப் போராட்ட வீரர்கள் பயங்கரவாதிகளாக பட்டம் சூட்டப்பட்டிருந்தனர்.
சர்வதேசத்தின் செல்லப் பிள்ளைகளாக இருந்தவர்கள் சர்வதேச சமூகத்தின் சொல்லுக்கு இணங்கி போக மறுத்ததினால் பயங்கரவாதிகளாக வெளிப்படுத்தப்பட்டார்கள். இது தொடர்பாக உலக வரலாறு எமக்கு சிறப்பான சில உதாரணங்களை எடுத்துக் காட்டியுள்ளது.இன்று உலகின் முதன்மையாக மதிக்கப்படும் மனிதரான முன்னாள் தென்னாபிரிக்கா ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அவர்கள் முன்னர் பயங்கரவாதியென முத்திரை குத்தப்பட்டமையும் இன்றைய உலகின் முதற்பயங்கரவாதி ஒசாமா பில்லேடன் முன்னர் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக வர்ணிக்கப்பட்டமையும் இதற்கு சிறந்த உதாராணங்கள் ஆகும். சர்வதேச சமூகம் என்பது கூட முழு உலகத்தையும் குறிக்கின்ற பொருளாக இருந்த போதும் இதன் செயற்பாட்டாளர்கள்களாக வல்லமை பொருந்திய குறிப்பாக அபிவிருத்தி அடைந்த நாடுகளே திகழ்ந்து வருகின்றன. இதில் சிந்திக்க வைக்கின்ற விடயம் யாதெனில், விடுதலை போராட்டம், புரட்சி மூலம் விடிவுபெற்ற நாடுகளே தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை நசுக்க கங்கணம் கட்டி நிற்கின்றன.
மிக வலிமை பொருந்திய சர்வதேச சமூகம், மற்றுமொரு சவாலான சூழல், நசுக்க முனைகிறது என்ற வார்த்தைப் பதங்கள் ஆழமாக சிந்திக்க தூண்டும். சிலருக்கு கேலிக்குரியதாக இருக்கலாம். உண்மை என்னவெனில் எமது போராட்டத்திற்கான சதிவலையே சர்வதேச சமூகத்தினால் பின்னப்பட்டுள்ளது.
ஒரு தேசத்தின் விடுதலைப் போரில் தனித்து ஆயுதப் போர் மட்டும் என்றில்லை. அதையும் தாண்டி பல பரிமாண போர் வியூகங்கள் உண்டு. இவ்வகையான பரிமாணங்களை உலகுக்கு தமிழர்படை உணர்த்தியுள்ளது. அதேவேளை தமிழர்படையும் அந்த வகையான உலகின் போர்முறையை உணர்ந்து வருகிறது. இதற்கேற்றபோல் சில ஆரம்ப மாற்று நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், இது போதாது, இன்னும் மேற்கொள்ள வேண்டிய பல நடவடிக்கைகள் உண்டு. அனுபவமே சிறந்த ஆசான். இந்த அனுபவம் தமிழர்களின் வெற்றிக்கு மிகப் பலம் பொருந்திய தூணாக விளங்கி வருகிறது. ஆனால், சர்வதேச சமூகம் மிகநேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பின் ஊடாக கோட்பாடுகளை உருவாக்கி காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச சமூகம் என்றும் எதிலும் நடுநிலையோடு அல்லது நேர்மையோடு செயல்படும் என எதிர்பார்ப்பது மடைமைத்தனம். நோர்வே எமக்காக நிற்கும் என கனவு காணவும் கூடாது. அமெரிக்கா சிறிலங்காவோடு இணைந்து எமக்கு அடிக்க வருவான் என கற்பனையும் பண்ணக்கூடாது. தமிழ் தேசியத் தலைவர் குறிப்பிடுவது போலு ‘பலம்தான் அனைத்தையுமே தீர்மானிக்கிறது.” உலக ஒழுங்கு என்பதே பலத்தில்தான் சுழல்கிறது.
இதனை மறுத்தால், இன்னொரு வடிவத்தில் பார்ப்போம்.
நோர்வே சரியாக செயற்பட்டிருக்குமாயின் பலஸ்தீன மக்கள் ராங்கிகளுக்கு முன்னே கற்களோடு நிற்க வேண்டிய தேவையோ, முற்காலங்களில் மிடுக்கோடு இருந்த ஒரு தலைவர் தனது மருந்துவதேவையை பூர்த்தி செய்ய இஸ்ரேலின் அனுமதியை வேண்டி தவம் இருக்க வேண்டிய நிலையோ ஏற்பட்டிருக்காது.
நோர்வே இலங்கைத்தீவின் இனப்பிரச்சினையில் தலையிட முன்வந்து தமிழர்கள் மீதான அனுதாபத்தில் இல்லை என்பதை தமிழர்கள் உணர வேண்டும். அமெரிக்கா உள்ளிட்ட சில வல்லாதிக்க நாடுகளுகம், பல சுய இலாப நோக்கங்களும் பின்னணியில் இருந்தன. எரிக் சொல்கெயம், ஜோன் வெஸ்பேக், விதார் கெல்கீசன் தனிப்பட எம்மோடு நன்றாக பழகியிருக்கலாம். இது கூட ஒரு இராஜதந்திர வலைப்பின்னல் என்பதே உண்மை. பெரும் இலக்குகளில் தனி மனிதர்களின் விருப்பு வெறுப்புகளிற்கு அப்பால் சுயநல தேசங்களின் நலன்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். இல்லையெனில் தமிழர்களுக்கு ஒரு தொகுதி பொருட்களை வழங்கியதற்கு இனவாதிகள் கூச்சலிட்டதற்காக JVPயை ஜப்பானுக்கு அழைத்து சென்று சொகுசாக தங்க வைத்ததோடு தென்னிலங்கையில் குறிப்பாக அம்பாந்தோட்டை போன்ற பகுதிகளில் பெரும் அபிவிருந்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப்பார்களா? இவையெல்லாம் இராஜதந்திரத்தின் நகர்வுகளில் ஒரு வடிவம்.
அதேபோல் அமெரிக்கா எப்போதுமே எமக்கு எதிரி என்ற எண்ணமும் தப்பானது. அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை, நிரந்தர நண்பனுமில்லை என பொதுவாக பேசிக் கொள்வார்கள். அமெரிக்காவினுடைய பட்டியலில் தமிழர்களின் போராட்டம் பயங்கரவாதிகளாக சேர்க்கப்பட்டமை தமிழர்படையை தனது கைகளுக்குள் வளைத்துப் போடும் முயற்சியே தவிர, எமது விடுதலைப்போராட்டம் பயங்கரவாதம் இல்லையென்பது அமெரிக்காவுக்கு நன்கு புரியும். இன்றுவரை அதன் பட்டியலில் தமிழர்படை தொடர்வதற்கு காரணம் உண்டு. உண்மையான காரணம் என்னவெனில், அமெரிக்காவினுடைய கணக்கின் படி தமிழர்படை மீதான தடையைத் தொடர்ந்து நீடித்தால் தமிழர்படை நடுங்கிப் போய் தன்னிடம் பணியும் என கணக்குப் போட்டது. ‘றோ” வினுடைய வழிமுறையிலேயே CIA யும் கணக்கை நிறுவ முற்பட்டு தலை சொறிகிறது. பேனாக்கள் மாறுபட்டதே தவிர ஒரு கணக்கையே இரு தரப்பும் வௌ;வேறு வழிமுறைகளில் மேற்கொள்கிறது. ‘குனியாத தலைவன், பணியாத புலிப்படை, வளையாத மக்களின் போராட்ட பங்களிப்பு” போன்றவையே RAW வையும் CIA யையும் குழப்பமடைய வைத்துள்ளது. சிறிலங்காவை ஆதரித்தால் தனக்கு இலாபம் இருக்கும் என கருதியதாலேயே அமெரிக்கா சிறீலங்காவை ஆதரிகிறது. இறைமையுள்ள அரசுக்கு இறைமை பொருத்திய இன்னொரு அரசு உதவுவது என்பதெல்லாம் கண்கட்டி வித்தைக்கு ஒப்பானது. அமெரிக்காவுக்கு நிலவை கண்ணாடியில் பிடித்துக் கொடுக்கலாம் என சிறிலங்கா எண்ணியது. தன்னைப் போலவே பிறரையும் சிறிலங்கா நினைத்தது. அமெரிக்காவோ சிறிலங்காவின் திட்டத்தை உடனடியாகவே புரிந்து கொண்டது. அதன் வெளிப்பாடு தான் அமெரிக்காவின் கைப்பொம்மையான ஜ.நா.சபை செயலாளர் கோபி அனான் லெப்.கேணல்.கௌசல்யன் மரணமடைந்த போது வெளியிட்ட அறிக்கை. சிறீலங்கா திமிறினால், நாம் வளைந்தால் அமெரிக்கா தமிழர் பக்கம் சாயும். ஏனெனில், அவ்வாறான நகர்வினூடாகவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுயஇலாபங்கள் பூர்த்தி செய்யப்படும்.
உலகம் நடுநிலைமையோடும் மனச்சாட்சியோடும் செயற்படுகிறதென்றால் ஈராக்கில் மரணங்கள் தொடர்கதை ஆகியிருக்க முடியாது.
தமிழீழம் கேட்ட தமிழர் சமஷ்டிக்கு கீழிறங்கி அதிலிருந்து இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கு நகர்ந்து இறுதியாக ஆக சுனாமியில் பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களினை கட்டியெழுப்ப கைச்சாத்திட்ட சுனாமிக்கு பின்னரான உத்தேச பொதுக்கட்டமைப்பையே நடைமுறைப்படுத்தப்படுத்தாதா சிறீலங்காவும் அதற்கு முண்டு கொடுக்கும் உலகுமா எமது தேசத்தின் விடுதலைக்கு உதவப் போகிறது?
சாதாரண பொதுக்கட்டமையை நடைமுறைபடுத்த முடியாதவர்கள் நிலையான கௌரவமான ரீதியான சமாதானத்தை உருவாக்குவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைவு என்பது ஒரு உத்தேசமானது. ஆக 5 வருடத்திற்கே அதன் செயற்பாட்டிற்கு உத்தரவாதமிருந்தது. அப்படியிருந்தும் அதனைக் கொடுக்க எந்தவொரு சிங்கள பேரினவாத அரசியல் கட்சியும் முன்வரவில்லை. உலகமும் மௌனமாகவே இருந்தது. சமபங்காளிகளில் ஒருவர் வழி தவறிப் போனாலும் அதனை சரிப்படுத்த வேண்டிய பொறுப்பு வசதிப்படுத்துனருக்கு (facilitator) மத்தியஸ்தருக்கு (mediator) இருக்க வேண்டும். இதனை உரிய தரப்பு உருப்படியாக செய்ததா? தமிழர்களை நசுக்க பேரினவாதத்திற்கு ஆதரவாக நின்ற கூட்டம், பேரினவாதத்தால் தமிழரின் நியாயமான போராட்டத்தை வெல்ல முடியாது என தெரிந்து கொண்டதும் தானே களத்தில் குதித்துள்ளது.
8 இராணுவத் தளபதிகள், 4 ஜனாதிபதிகள் 5ற்கு மேற்பட்ட பாதுகாப்பு அமைச்சர்கள் என சீறிலங்காவின் வரலாறு நீண்டகாலமாக தொடர இவையனைத்திற்கும் ஈடாக தனித்து ஒரு மனிதனாக தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் மிளிர்கிறார். (தமிழர்படையின் அடையாளமே பிரபாகரன்)
இவ்வாறான நிலையில்தான் சிறீலங்காவிற்கு பெரும் ஆயுத தளபாட உதவிகளையும், பயிற்சிகளையும் வழங்கிய வல்லாதிக்க நாடுகளும் மறைமுகமாக நேசக்கரம் நீட்டிய நாடுகளும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்க திட்டம் திட்டி செயற்பட்டு வருகின்றன.
அது எப்படி என அலசுவோம்.நூற்றுக்கணக்கான சிறுவர்களை சிறீலங்கா படைகள் வடக்கு கிழக்கில் கொன்று குவித்த போது அமைதியாக இருந்த சிறுவர் நலனில் அக்கறை கொண்ட அமைப்புகளும் நாடுகளும், சிறுவர்களை புலிகள் தமது படைகளில் இணைத்துக் கொள்கின்றனர் என குற்றம் சாட்டி வருகின்றன. (சிறீலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரின் பங்கு அதில் அளப்பரியது).
இந்த அமைப்புகளும் நாடுகளும் ஏன் இன்னொரு பக்கத்தை முற்றாகவே மறந்து போனார்கள்? விடுதலைப் புலிகளின் பராமரிப்பில உள்ள செஞ்சோலையிலும் அறிவுச்சோலையிலும் மட்டும் சுமார் 650 ற்கு மேற்பட்ட சிறுவர்கள் எந்தவித குறையுமில்லாமல் மிக நன்றாக பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள். இவர்களில் பலர் சகலதுறை விற்பன்னர்களாக திகழ்கின்றார்கள். இவர்களுடைய ஆளுமையை வைத்தே இவர் இங்கிருந்து தான் வருகிறார் என குறிப்பிட முடியும். அந்தளவிற்கு இந்த சிறுவர்கள் திறமைசாலிகளாக திகழ்ந்து வருகிறார்கள். தனித்து இந்த சிறுவர் இல்லங்கள் மட்டுமன்றி வேறு சில சிறுவர் இல்லங்களும் புலிகளின் ஆலோசனையோடும் ஆதரவோடும் இயங்கி வருகிறது.
இவற்றினை யாரும் சென்று பார்வையிடலாம். அப்படியான வசதியிருந்தும் உண்மையை கண்டறிய முன்வராத அமைப்புகளும் நாடுகளும் தொடர்சியாக புலிகளை குற்றம் சாட்டுவதிலேயே முனைப்பு காட்டி வருகின்றன.
சரி இவர்கள் குறிப்பிடுவது போல புலிகள் சிறுவர்களை படையில் சேர்த்துக் கொள்கின்றார்கள் என வைத்துக் கொள்வோம். சிறுவர்கள் என 18 வயதிற்கு கீழ்ப்பட்டடோரை குறிப்பிடலாம். புலிகளின் அமைப்பில் இணைய வருவோரில் பெரும்பாலானோர் 17 வயதுடையவர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர்.
ஜக்கிய நாடுகள் (ஜ.நா) சபை சட்டத்தின் படி ஒரு நாடு (தேசம்) 18 வயதிற்கு குறைந்த வயதுடையோரை படையில் இணைக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பானது ஒரு தேசத்தினை மீட்டெடுப்பதற்காக பேராடி வருகின்ற ஒரு இயக்கம் அதாவது உருவாகிக் கொண்டிருக்கின்ற ஒரு தேசம். ஆகவே, 17 வயதுடையோரை படையில் இணைத்துக் கொள்ள முடியும். தோற்றம் பெறுகின்ற போது குறித்த அமைப்புக்கள் தமது ஆரம்பக் கட்டத்தில் 16 வயதுடையோரை தமது படையில் இணைத்துக் கொள்ள முடியும்.18 வயதிற்கு குறைந்தோரை ஒரு நாடு/தேசம் (country/State) படையில் இணைத்துக் கொள்ள முடியாது. இதனை சல்லடை போட்டு தேடப்போனால் சிறீலங்கா தடுமாறும். மறுபுறமாக நோக்குவோமானால்,18 வயதிற்கு குறைந்தோரை படையில் இணைக்க கூடாது என்று கூறுவதனூடாக தமிழீழம் ஒரு தேசம்/நாடு என்பதை குற்றம் சாட்டுவோர் அங்கீகரித்து விட்டார்கள் என்ற முடிவுக்கு வரலாமா?
சரி விடுதலைப் போராட்டத்தை நசுக்க சிறுவர் உரிமை எப்படி முக்கியத்துவம் பெறுகிறது?
விடுதலைக்காக போராடிய அமைப்புக்களை முரண்பாட்டு உருமாற்றம் (conflict transforamatioan) செய்வதில் வல்லாதிக்க சக்திகள் முனைப்பு காட்டும். அதில் முக்கிய விடயமாக சிறுவர்களை படையில் இணைத்தலும் உள்ளது.
விடுதலை அமைப்புக்களை பலவீனப்படுத்தும் விடயமாக சமாதானம் உள்ளது. சமாதானம என்னும் போது, விடுதலை கோரி போராடிய அமைப்புகளிற்கு நியாயமான தீர்வினை வழங்க முன்னரே முரண்பாட்டு உருமாற்றம்/நிலைமாற்றம் (conflict transforamatioan) இற்கு உட்படுத்த உலகம் கவனம் செலுத்தும்.
இதன் மற்றுமொரு முக்கிய கட்டமாக ஆயுதக்களைவை (Disarmament) ஆட்கலைப்பு (Demobilisation) மீள திரட்டுதல்/மீளிணைத்தல் (Reintegration) ஆகியவை உள்ளது. இதனை சுருக்கமாக DDR என அழைப்பார்கள். விடுதலைப் போராட்டகளிற்கு DDR ஒரு பொறி கிடங்கு. இதனை அடிப்படையாக வைத்துத்தான் அடக்குமுறையாளர்கள் தேசிய விடுதலைப் போராட்டங்களை முறியடிக்கிறார்கள். DDR இன்று தமிழர் தேசம் அறிய வேண்டிய முக்கிய கட்டம் என்பதால் அடுத்த கட்டுரையில் இது தொடர்பாக ஆழமாக பார்ப்போம்.
DDR இன் நிழ்ச்சிக்கு அண்மையில் பலியான அமைப்புக்களை கூறலாம். 1.அயர்லாந்து 2. ஆச்சே
அயர்லாந்து போராளிகள் ஆயுதத்தை கையளித்ததை முன்மாதிரியாக் கொண்டு விடுதலைப் புலிகளும் ஆயுதக் கையளிப்பிற்கு முன்வரவேண்டும் என்ற குரல்கள் ஒலித்தன.
ஜனாதிபதி சந்திரிகா தொடர்பான நூல் வெளியீட்டு விழாவில் கதிர்காமர், நூல் ஆசிரியர் வில்சன் உட்பட பலரும் இந்த கருத்தை வலியுறுத்தி பேசினார்கள்.
ஆயுதக்களைவிற்கு முன்னர் அதற்கு தகுந்த சூழல் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கான எந்தவொரு சூழலும் இலங்கைத் தீவில் இல்லை. மாறாக அதற்கான சூழலை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளே தொடர்கின்றன.
தனிநாட்டை கேட்டவர்கள் பொதுக்கட்டமைப்பு வரைக்கும் வந்துள்ளமையை உணர்ந்து மகிழ்வடைவதோடு பதிலுக்கு அரசாங்கமும் விட்டுக்கொடுத்திருக்க வேண்டும். மாறாக, அரசாங்கம், புலிகளை கோபப்படுத்தி சீண்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. புலியின் பொறுமையை சோதித்துப் பார்க்க முயல்கின்றது. புலிகள் பொறுமையிழந்தால் உலகம் தன்னோடு சாயும் என்ற எதிர்பார்ப்பு அரசாங்கத்தை அவ்வாறு செயற்பட தூண்டியிருக்க முடியும். இவற்றை மனதில் வைத்தே புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு பிரதான சக்திகளாக துiணைப்படையை (Paramilitary) கூலிப்படைகளை சிறீலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவு பயன்படுத்துகின்றது.இந்த விடயம் பல தடவை கண்காணிப்பு உள்ளிட்ட பலராலும் நிரூபிக்கப்பட்ட போதும், மூன்று வருடத்திற்கு முன்னரே துணைப்படையை கலைத்துவிட்டதாக சிறீலங்கா இராணுவத் தளபதி சாந்த கோட்டேகொட கூறுகிறார். நிலவை முகிலுக்குள் மறைக்கும் முயற்சிக்கு ஒப்பானது இந்த முயற்சி. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சரந்து 1.8 இன்படி வடக்கு கிழக்கில் துணைப்படைக் குழுக்கள் இயங்குவது பாரிய போர் நிறுத்த மீறலாகும். ஆனால், சிறீலங்காவோ, சர்வதேச சமூகமோ இதனை உணர்ந்து செயற்பட இதுவரை ஏன் முன்வரவில்லை?
அவ்வாறு நிகழுமாயின் புலிகளை பலவீனப்படுத்த முடியாது. அதேவேளை புலிகளின் நியாயமான போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டிய கட்டாய சூழலும் உண்டாகும். ஒப்பந்தத்திற்கு முரணான தாக்குதல்களால் புலிகளை பலவீனமடைய செய்யலாம். அதனூடாக புலிகளை வெற்றிக் கொள்ளலாம் என்பது தப்புக் கணக்கு. இந்த கணக்குத்தான் எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு பெரும் விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது.
துணைக்குழுக்கள் 3 வருடத்திற்கு முன் கலைக்கப்பட்டுள்ளதென்றால் சுமார் 1 1/2 வருடத்திற்கு முன் கொல்லப்பட்ட புளொட் மோகன் யார்? 1 1/4 மாதத்திற்கு முன் கொல்லப்பட்ட வரதர் அணி காந்தி யார்? (துணைப்படையின் முக்கியஸ்தர்கள்)
உலகின் இவ்வாறான கோட்பாடுகளினாலேயே தமிழர்களின் நிலைப்பாடும் மாற்றம் அடைய தொடங்கியது. அத்தகைய நிலைப்பாடு மாற்றம் என்ன என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
2002/02/22 கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் புரிந்துணர்வில்லா ஒப்பந்தமாக மாறியது. பரஸ்பரம் இருதரப்புமே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறிச் செயற்பட்டது. இதற்கான வழிவகையை சிறீலங்காவே உண்டாக்கியது. போர்க்காலத்தில் ஆடம்பரமான வாழ்க்கையோ சொகுசான வசதியோ வடக்கு கிழக்கு மக்களிற்கு இருக்கவில்லை. ஏன் சாதாரண இயல்பு வாழ்க்கையே இல்லை. ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னர் உள்ளதை விட முன்னர் ஒரு மகிழ்வு இருந்தது. அதனை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. ஆனால், அதனை நினைக்கின்ற போதே ஒருவித சிலிர்ப்பும் மிடுக்கும் தோன்றும். அந்த காலத்தோடு ஒன்றித்து வாழ்ந்தவனுக்கு அது நன்றாக புரியும்.
பெற்றோச் பற்றறியை கடித்து கடித்து உபயோகித்த போதும் ஒரு திருப்தி இருந்தது.
தமிழர்படை தனது தேசத்தின் எந்தப் பகுதிக்கும் விரும்பிய நேரத்தில் விரும்பியபடி போக முடிந்தது. தடை வந்தால் உடைத்துவிட்டு சென்றார்கள். அன்று எங்கள் கடலில் நுரையை பார்த்தே பயந்த எதிரி இன்று எமது கடலின் மடிமீது ஏறி வருகிறான்.
மொத்தத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் எமக்கு எந்தவிதமான ஏற்றமான வாழ்வுமில்லை. ஏன். இயல்பு வாழ்வே இதுவரையில்லை. நாமோ புளுக்கத்தில் தெற்கோ புளுகத்தில்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழர்களின் கைகளிற்கு கட்டுப்போட்டது. எம்மை பார்த்து அஞ்சியவர்கள் நாம் விட்டுக்கொடுத்ததை கெஞ்சுவதாக எண்ணுகிறார்கள். எமது 20 வருடகாலத்திற்கு மேற்பட்ட பெறுமதிமிக்க விலை கொடுப்புகள், கேள்விக் குறியாகி விடுமோ என தமிழ் மக்கள் அஞ்ச தலைப்பட்டார்கள்.
இதன் விளைவுமக்கள் போராட்டங்கள் வடக்கு கிழக்கெங்கும் முனைப்பு பெற தொடங்கின.
இதன் முதற்கட்டமாக, 'தலைவரே போருக்கு ஆணையிடுங்கள்’ ‘பொறுத்தது போதும் பொங்கியெழு தலைவா’ 2005ம் ஆண்டு போர் ஆண்டென பிரகடனம், தலைவரே! நீங்கள் காட்டும் திசையில் செல்ல காத்திருக்கிறோம்” போன்ற தொனிப்பட மகஜர்கள் மக்களால் தமிழ் தேசிய தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அடுத்து, தற்காப்பு பயிற்சியை தமக்கு வழங்க வேண்டும் என வன்னி மக்கள் கேட்டார்கள். இன்று தமிழர் தாயகப் பிரதேசத்தின் பெரும்பாலானோர் தற்காப்பு பயிற்சியில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ‘பொங்குதமிழ்” நிகழ்வின் போது நிகழ்வு இடம்பெற்ற மைதானத்திற்குள் அடக்கு முறையின் சின்னமாக இராணுவத்தினரின் மாதிரியொன்று கொண்டு வரப்பட்டது. இதனைக் கண்டதும் ஆத்திரமும், ஆக்ரோசமும் கொண்டு மக்கள் கூட்டம், ஒழுங்கமைப்பாளர்கள் அறிவுறுத்தல்களையும் தாண்டி செருப்புகளாலும், தடிகளாலும், கற்களாலும் அடித்து வீழ்த்தினார்கள்.
மற்றுமொரு நிகழ்வின் போது,புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சிறீலங்கா இராணுவம் மீறுகிறது. எம்மீது அடக்குமுறையையும் தாக்குதல்களையும் நடத்துகிறது. இனிமேல் நாம் பொறுமை காக்க மாட்டோம். திரும்பி தாக்குவோம் என்றார்கள்.
இந்த சம்பவங்கள் எல்லாம் உலகிற்கும் சிறீலங்காவிற்கும் ஒரு சேதியை மிக தெளிவாகவும் உறுதியாகவும் கூற முனைகிறது. அது யாதெனில் உரிமைகள் மறுக்கப்பட்டதினால் விடுதலை வேட்கையோடு போராட புறப்பட்டவர்கள் தமிழர்கள். அதேவேளை வன்முறையையோ போரையோ நாம் விரும்பவில்லை. ஆனால், எம்மீது திணிக்கப்படுகிற எதற்கும் அதற்கு உரிய வழியிலேயே பதிலடி கொடுக்க தயங்கப் போவதுமில்லை. எமது மண்ணில் அனைத்து உரிமைகளுடனும் கூடிய நீPதியான, கௌரவமான சமாதானத்தையே நிலைநாட்ட விரும்புகிறோம். அதற்காக அகிம்சை ரீதியிலான போராட்ட வடிவங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுமானால் நாம் மீண்டும் ஆயுதங்களை ஏந்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும். அப்போது, எமது மகஜர்களில் கூறியவையையும் மாதிரிகளை சரித்தமையும் நடைமுறையில் நிஜமாகவே செயல்படுத்த வேண்டிய சூழல் உருவாகும். எமது விடுதலையை நாமே வென்றெடுப்பதற்காக மீண்டுமொருமுறை ஆனால் இறுதியாக ஆயுதங்களை தூக்க வேண்டிய சூழல் உருவாகிறது. அதன் ஒரு சிறந்தபடி எமக்கான தற்காப்பு பயிற்சி.
இம்முறை, மக்கள் வெள்ளம் ஓயாத அலையாக பெருக்கெடுப்பதற்குள் உலகே நீ ஒரு முடிவெடு. இல்லையேல் சிறீலங்காவின் ஓலம் உலகெங்கும் ஒலிக்கும் இதுதான் விடுதலையை அவாவிநிற்கிற தமிழ் மக்களின் நிலைப்பாடு. இந்த சேதிதான் உலகின் கோட்பாட்டிற்கு நிகராக சொல்லப்படுகிற தமிழரின் நிலைப்பாடு. நிலைப்பாடுகளோ கோட்பாடுகளோ நிலையான இருக்கவேண்டியதில்லை. இன்றைய தருணத்தில், உலகின் கோட்பாடு மாறவேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லையேல், முன்னரே குறிப்பிட்டது போல தமிழர்களின் பலம்தான் அதனை மாற்றியமைக்கும்.
பன்னிரெண்டு போராளிகளை பலியெடுத்ததற்காக பெரும் வல்லரசையே எதிர்க்க துணிந்து வெற்றிபெற்ற எம் தலைவன், சாமாதான காலம் என சொல்லப்படுகின்ற காலப்பகுதியிலே 100இற்கு மேற்பட்ட போராளிகளையும் பொது மக்களையும் பறிகொடுத்த பின்பும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்கிறார். அவருடைய நிதானமும் அமைதியும் கலைந்து அவர் பொறுமை இழந்தால் என்ன நடக்கும்?

0 Comments:

Post a Comment

<< Home