தமிழ்த் தேசியவாதி

Wednesday, October 18, 2006

ஒரு தமிழனின் குரல்! ஐயா அகாசிக்கு ஒரு யாழ் வாசியின் மடல்.

அன்புள்ள அகாசி ஐயாவுக்கு!

வணக்கம்.

நீண்ட அமைதிக்கு பின்னர் உங்கள் குரல் கேட்க முடிந்தமை மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இலங்கைத் தீவினுடைய இன மோதுகைக்குகு அரசியல் ரீதியாக தீர்வுகாண வேண்டுமென்பதில் முனைப்போடு செயற்படுகின்றமைக்கு தமிழ் மக்களின் சார்பில் நன்றிகளும் பாராட்டுக்களும்.

நான் சொல்ல முனைகின்ற விடயத்தை, மிக விரைவாகவும், சுருக்கமாகவும் அனேகமாக இறுதித்தடவையாகவும் கூறமுற்படுகின்றேன். ஏனெனில், எங்கள் சூழல் அத்தகையது. அத்தகைய சூழலுக்குள் எங்களை தள்ளியவர்களிற்கான பொறுப்பு உங்களுக்கும் உண்டு.

நாங்கள் பொறுமையாக 4 ¾ வருடங்கள் கூறியது போதும் போதும் என்றாகி விட்டது. உங்களுடைய பொறுப்புணர்வையும் எங்களிற்கு புரிய முடிகிறது. எங்கள் கொல்லைப் புறத்திற்கு வர அச்சமுற்ற எதிரி இன்று எம் முற்றத்திற்கு வந்து நெஞ்சில் ஏற துணிகிறான். எங்கள் மண்ணில் வாழ வேண்டுவேண்டுமானலும் சரி அல்லது மாழ வேண்டுமானாலும் சரி எங்களிற்கென்று ஒரு பொறுப்பு இருக்கிறது. அத்தகைய பொறுப்பை எந்தக் காரணத்தினாலும் தட்டிக்கழிக்க முடியாது. எமது வாழ்வை நாமே நிர்ணயிப்பவர்களாக இருந்தால் மட்டுமே முழு மனிதனாக நாம் வாழ முடியும் என்பதை போர்நிறுத்த காலப்பகுதி மீண்டும் மீண்டும் குட்டிச் சொல்கிறது.

அதற்கான ஆயுதங்களை செய்ய வேண்டிய தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டுள்ளது. படுகொலைகள் தொடர்கிற, குண்டுகள் எம் மண்ணில் பொழிகிற, பொருளாதார தடைகள் ஏற்பட்டுள்ள குறிப்பாக அரசியல் ரீதியான எமது எதிர்பார்ப்புக்கள் அனைத்தையுமே தவிடுபொடியாக்கப்பட்டுள்ள நெருக்கடி மிகுந்த சூழலுக்குள் இருந்து கொண்டு இந்த மடலை எழுதுவதற்கு என்னை தூண்டியது, ஜீலை மாத இறுதிப்பகுதியில் நீங்கள் கூறிய கருத்துக்களே.

எந்தவொரு இராசதந்திரமும் உண்மைக்கு முன்னால் என்றோ ஒருநாள் மண்டியிட வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நீங்கள் வகுத்த நுட்பங்களின் விளைவு உலைக்கள வியாசன் எழுதியது போல் “பாவப்பட்ட சமாதானமென்ற சொல் மீதே கோபம் வருகிறது எமக்கிப்போ”

உங்களிற்கும் எங்களிற்கும் இடையில் ஒரு ஒற்றுமை உண்டு. இருதரப்புமே சாம்பலிலிருந்து எழும் பீனிக்ஸ் போன்ற வல்லமையுடையவர்கள். இது வரலாறு கண்ட யதார்த்தம். அந்த வரலாறுதான் எமக்கு வழிகாட்டியாகவும் நிற்கிறது. அப்படியிருக்க, எப்படி பொதுவான சில விடயங்களில் தனித்தனி நீதி இருக்க முடியும்.

1983 ஐPலை கலவரம் போன்ற கடந்த கால வன்முறை தாக்கங்களின் வரலாறுகளிலிருந்து தமிழர்கள் மீள வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆர்மிரேஐ;சோ, அல்பிரட் அம்மையாரோ இதைக் கூறியிருந்தால் சகித்திருக்கலாம் ஆனால்…………………..

60 ஆண்டுகள் கடந்தும் ஹீரோசிமா, நாகசாகி தாக்கத்தை நினைவுகூர்ந்து அனுஷ்டித்து, அதனை ஒரு படிப்பிணையாக கொண்டு வளர்ச்சியடைந்த நீங்கள் இப்படி கூறலாமா? உங்களிற்கு எதிராக நடந்தது போர். அது நீங்கள் விதைத்த விதையின் அறுவடை. எங்களிற்கு எதிராக நடப்பது இன ஒழிப்பு. எங்களிற்கும் தாங்களே அரசாங்கம் எனக் கூறிக்கொள்ளும் எங்கள் அங்கீகாரம் இல்லாத அரசாங்கத்தின் கோரமுகம். அதாவது அரச பயங்கரவாதத்தின் அடக்குமுறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இது உங்களிற்கும் தெரிந்ததுதானே. அதனால்தானே கதிர்காமருக்கு உங்களோடு மனக்கசப்பு ஏற்பட்டது. கிறிஸ்பற்றன் வருகைதந்த போது தனக்கு நெருங்கியவர்களிடம் இதனை கதிர்காமர் விரக்தியோடு கூறியதாக அறிந்துள்ளேன்.

அப்படியிருந்த நீங்கள், ஏன் திடீரென இப்படி மாறினீர்கள்…. அடிக்கடி நீங்கள் வருவதாக பேச்சுக்கள் அடிபடும் பின்னர் அது தடைப்பட்டுப் போனதாக செய்திகள் வரும். தற்போது மீண்டும் நீங்கள் வருவதாக செய்தி பரவுகின்றது. இது உங்களுடைய இலங்கைத் தீவுக்கான பதின்மூன்றாவது விஜயம். அதிஸ்டம் இல்லாத 4 என்று சொல்லுவினம் அதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் நியாயத்தின் பக்கம் நீங்கள் நிற்பீர்களானால்; அதிஸ்டம் அற்றது கூட என்றோ ஒரு நாள் வெல்லும். நீங்கள் என்ன போக்கில் வருகிறீர்கள் என்பது உங்களுக்கும் நீங்கள் சார்ந்தோருக்குமே வெளிச்சம். ஆனால் ஒரு விடயத்தை தெளிவாக கூறுகிறேன், எங்களை மிரட்டி எதையும் சாதிக்கலாம் என்பதை மறந்து விடுங்கள்.அது கற்பனையாகவும் கனவாகவுமே காலம் முழுக்க இருக்கும். இந்த நிலையிலேயே கடந்த ஜீலை மாத இறுதியில் நீங்கள் கூறிய கருத்துக்கள் மீதான ஒரு பிரதிபலிப்பை இங்கே வெளிப்படுத்த விரும்புகின்றேன்.

உண்மையில் இந்த பிரதிபலிப்பு உடனடியாகவே எங்களிடமிருந்து வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆயினும், எங்கள் வாழ்வியல் முறைமையில் ஏற்பட்டுள்ள மாற்றம் அதனை பின்தள்ளி விட்டது. தாமதமானாலும் தரமான விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் எப்போதும் உண்டென்பதால் சில விடயங்களை சுருக்கமாக அழுத்தமாக உங்களுக்கு கூற விளைகிறேன்.

சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய தறுவாயில் ஐப்பான் அரசு இருப்பதாகவும் அதனை தலைவர் பிரபாகரனுக்கு தெரியப்படுத்துவதாகவும் மற்றும் ஏனைய சில அரசுகள் எடுத்தமை போன்ற தெளிவாகப் புரியக்கூடிய சில நடவடிக்கைகளை எடுப்பது குறித்து பரீசிலித்து வருகிறோம் என நீங்கள் கூறியிருந்தீர்கள்.

நீங்கள் எடுக்க இருக்கும் முடிவு தொடர்பாக தலைவர் பிரபாகரனுக்கு, தெரியப்படுத்த இருப்பது நல்ல விடயம் அதேவேளை, இன்னோர் விடயத்தையும் நீங்கள் மறக்கக்கூடாது. உங்களுக்கு எப்படி முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் உள்ளதோ அதனை விட “மிக முக்கியமான சூழல்” எங்களுக்குள்ளது. முக்கியமான சூழல் ஊடாக முன்வைக்கப்படவுள்ள தீர்க்கமான முடிவு ஒட்டுமொத்த தமிழர்களின் இருப்பிற்கான பதிலைப் தரப்போகிறது. ஏனைய சில அரசுகள் எடுத்த தவறான முடிவினாலேயே இந்த கணம் வரை விடுதலைப் புலிகளை என்ன செய்யலாம் என எண்ணி விழிபிதுங்கி நிற்கின்றன. இவர்கள் எடுத்த இந்த முடிவுதான் தமிழர் தரப்பை சமாதானப் பேச்சுக்களிலிருந்து தூரத் தள்ளியது. அன்று உங்களைப்போல் சிந்தித்தவர்களே இன்று இத்தகைய கருத்துக்களை கூறுகிறார்கள். இப்படியிருக்க அகாசி ஐயா நீங்களுமா இப்படி???

தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடர்பாக சில கருத்துக்களை தெளிவாக புரிந்து வைத்துள்ள நீங்களா, எங்களுக்கு புரியும் படியான சில நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டீர்கள்.

எமது தாயகப் பரப்பில் UAV அதாவது உளவு விமானம் தலைக்கு மேலே சுற்றிக்கொண்டிருக்கின்ற, கிபீர் விமானம் குண்டுகளை “கொட்டிக்” கொண்டிருக்கின்ற, பல்குழல் உட்பட்ட எறிகணைகள் எங்கள் தேசத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கின்ற, பிசாசுகள் போல் சிங்கள கடற்படை அலைந்து கொண்டிருக்கின்ற, நாசகார அரசாங்கங்கள் எங்களை அழிக்க வேண்டும் என்பதற்காக ஒன்றிணைந்திருக்கின்ற இந்த வேளையிலும் நீங்கள் சொன்ன அந்த வரிகளை மிகத் திடமாக திரும்பவும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

எமது மக்களின் அவலத்தை தீர்ப்பதற்காக எமது உரிமையை வென்றெடுப்பதற்காக தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்விற்காக தன்னையே அர்ப்பணித்துள்ள தமிழர் தலைவர் பிரபாகரன் அவர்கள், கொள்கையில் உறுதிப்பாடுடைய ஒரு மகாபுருசர், தமது இலட்சியப் பயணத்தையிட்டு மிகத்தெளிவான செயல்திட்டத்தை வைத்துள்ளார் என்பதை நீங்கள் விரைவில் மீண்டும் உணரப் போகிறீர்கள்.

பசிக்கு உணவின்றி எங்கள் பிஞ்சு மழலைகள், பெண்கள்,முதியோர் உட்பட்ட மக்கள் தவித்துக்கொண்டிருக்கின்ற, மாளிகையில் வாழ்ந்த வம்சம் மரநிழலில் வாழ்கிறது.இதன் அர்த்தம் எமக்கு எம் மண்ணில் வாழ்கின்ற சுதந்திரம் வேண்டும்.அத்தகைய சுதந்திரம் கிடைக்கும் என்றால் காலம் முழுக்க எங்கள் வாழ்வு மரநிழழில் கழிந்தாலும் கவலையில்லை. சுமார் 3 இலட்சம் உறவுகளின் நிலை இதுதான்.எமது 3 தசாப்த கால விடடுதலை போராட்ட வரலாற்றில் இதனையும் விட அதிகமான அவலங்களை அனுபவித்திருக்கிறோம்.ஆனால் அது போரென நேரடி பிரகடனத்தோடு மேற்கொள்ளப்பட்ட காலம். இதுவோ போர்நிறுத்த காலம் என்று கூறப்படுகின்ற பகுதி.

ஏன் நிலைமை இப்படியானது?

தமிழர் தரப்பானது எதிரியானவன் கனவில் காணமுடியாத இராணுவ சாதனைகளை படைத்து எமது இராணுவ மேலாண்மையை சர்வதேச சமூகத்துக்கு நிரூபித்து காட்டிய போதே அந்த சர்வதேச சமூகத்தில் ஒருவராக நீங்களும் வந்தீர்கள். இப்படி உங்களைப்போல் பலவகையினர் பல்வேறு கோணங்களில். சிலர் கெஞ்சினார்கள், சிலர் மிரட்டிப்பார்த்தார்கள், பலர் அஞ்சினார்கள். எங்களுக்கும் “இராசதந்திரம்மும்” சாணக்கியமும் தெரிந்திருந்ததால் எல்லாவற்றிற்கும் சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்கின்ற அண்ணன் நீங்கள் உள்ளிட்ட உலக சமூகத்திற்கு பல சந்தர்ப்பங்களை தந்தார்,தந்துகொண்டிருக்கிறார்.

அதன் அடையாளத்தை அதற்குள் பொதிந்திருந்த அர்த்தத்தை முதுபெரும் இராசதந்திரி என்று சொல்லப்படுகின்ற நீங்களும் புரிந்து கொள்ளவில்லை. அதனால் உங்களுக்கென்றிருந்த அவகாசத்தையும் அநியாயமாக்கிவிட்டீர்கள்.இவற்றையெல்லாம் நீங்கள் உணர்ந்து மனச்சாட்சிப்படி நடப்பதென்பது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒப்பானது. ஆனால்,இதனை ஏன் கூறுகிறேன் என்றால் இதனால் உண்டான விளைவுகளும் இனி உண்டாகப்போகின்ற விளைவுகளும் உங்களுக்கும் விடுதலைப்போராட்டத்தின் தாற்பாரியங்களையும் அதன் அடிநாதத்தையும் விளங்கிக்கொள்ளாதவர்களுக்கும் ஒரு வரலாற்று பாடமாக இருக்கட்டும்.

போர்நிறுத்த அமுலாக்கம் என முழக்கமிட்ட உங்களால் ஒரு சமரையே நிறுத்த முடியாமல் போய்விட்டதே.உங்கள் போன்றவர்களிற்கல்லவா நாங்கள் சந்தர்ப்பத்தை தந்து போனோம்.எமக்குள்ள அமைதி மீதான ஆழமான நேசிப்பை வெளிப்படுத்த அடி மேல் அடியடித்த போதும் வலியை தாங்கிக்கொண்டு திருப்பி அடிக்காமல் இருந்தோமே? எங்கள் பிஞ்சுகளை அரச பயங்கரவாதம் கதறக் கதறக் குதறிக் கொன்ற போதும் வெஞ்சினத்தை அடக்கி பொறுமை காத்தோமே? 4 ¾ வருடகாலமாக பொறு பொறு என்றீர்கள் ஆனால் இன்று வரை உருப்படியாய் என்ன செய்தீர்கள்? ஐயா அகாசி சிங்கள பேரினவாத்துக்குத்தான் புரிய வில்லையென்றால் உங்களுக்குமா?

சு.ப.தமிழ்ச்செல்வன் தொடக்கம் தமிழ் கூட்டமைப்பு வரைக்கும் பெருமெடுப்பிலான வலிந்து தாக்குதலை சிறீலங்கா படைகள் மேற்கொள்ளப்போவதாக எச்சரித்தும் உங்களுடைய பதிற்குறி என்னவாயிற்று? நீங்கள் திரணியற்றவர்களா? அல்லது நாங்கள் திரணியற்றவர்கள் என்று எண்ணிவிட்டீர்களா?

ஐயா,உங்களுக்கான சந்தர்பங்கள் முடிவுக்கு வருவதற்கு மகிந்தர் முகூர்த்தம் பார்த்திட்டார். அதாவது உங்களுடய ஆட்டமும் தற்போதைக்கு முடிவுக்க வந்தாயிற்று. ஆனால் மகிந்தருக்கும் அவரது கூட்டணிக்கும் இன்னும் புரியவில்லை அவர்களிற்கும் அதுதான் நிலைமை என்று. அவர்களுக்கு இதனை தமிழ் மக்களின் சார்பில் புரியவைக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது.அப்போதுதான் அவர்களிற்கு வலிந்த தாக்குதலிற்கும் (Offensive attack),பதிற் தாக்குதலுக்கும் (Defensive attack) அர்த்தம் புரியும். அத்துடன் தமிழனின் உணர்வும்,எல்லை கடந்த பொறுமையுடன் காத்திருந்த புலிகளின் பாய்ச்சலின் வீச்சும் தெரியும்.

அதற்கான தேதி குறித்தாயிற்று நேரம்தான் மீதி. தமிழர் தலைவன் பிரபாகரனின் சுட்டும் விரல் அசைவிற்காய் காத்திருக்கின்றோம்.அவர் விரலசைவில் எங்கள் தாய்மண் இருள் விலகும். தமிழீழ தாயின் விழிகள் திறக்கும்.

“வேலும் உண்டு வெள்ளைக் கொடியும் உண்டு வேண்டியதை சிங்கள அரியணைக்கு நாம் கொடுப்போம்.”

நன்றி.

அன்புடன்,
சிவஒளி

1 Comments:

At 9:25 AM, Anonymous Anonymous said...

ம் நல்லா சொன்னீங்கோ.....

 

Post a Comment

<< Home