தமிழ்த் தேசியவாதி

Monday, October 23, 2006

காலம் கனிகிறது…- இரத்தின’மை’

உயிர் நிழலாக உதிரம் மையாகா
பயிர் வளர்த்தோம்.
விதியென்றும் வினையென்றும் விம்மாமல்
ஏமக்கென்றொரு வாழ்வமைக்க விரைந்தோம்.
நெருப்பாறும் நெடும்காடும் இடைவந்த போதும்
விடுதலையில் விருப்பு கொண்டதால்
நிமிர்வோடு நடந்தோம்.

பயணத்தின் பாதிவழியில்
நியாயத்தின் போதிமரம் என
சொன்னோரை சந்தித்தோம்.
அவர்கள்,
பலவர்ணசாயம் பூசிய
தித்திப்பான முட்டாய்களை காட்டி
எமது மீதிப்பயணத்தை முடக்க நினைத்தார்கள்.

மானுடதர்மத்திற்காய்
உடல்களில் வெடிகுண்டு சுமக்க தயங்காதவர்
அடக்கத்தோடு சொன்னோம்,
சிலுவைகளை சுமக்கிறோம் என்பதன் அர்த்தம்
சித்திரவதைகளை விரும்புகிறோம் என்பதல்ல.
உரியவர்கள் புரியமறுத்தார்கள்.

ஒரே அளவுகோலிலேயே
அடக்குமுறையையும் சுதந்திரத்தையும்
கணித்தார்கள்.
பணியமறுத்தமையினை வர்ணித்தவர்கள்
கிரகிக்க மறந்தார்கள்.

காலத்தின் சலிப்பும்
கரிகாலனின் பொறுமையும்
எல்லையை தொடும் தருணத்தில்.
எதிர்வினைகள் எதுவாயினும்
பொறுப்புக்கூறவேண்டியோர் நாமல்ல.
மீன்பெட்டிகளும் நெல்லுமூட்டைகளும்
குண்டு சுமக்க விரும்பியதில்லை.
இனவேரறுப்பு தெளிவாய் தெரிந்தபின்
ஆண்டபரம்பரை அலட்சியம் செய்யுமா?

சுனாமி கட்டமைப்பு செத்தபின்பும்
இனவாத கூட்டமைப்பு வந்தபின்பும்
சாமிசரணம் சொல்லிஆமியே போய்விடென்று
அமைதியாய் விடைகொடுத்தோம்.
அவனும் அசைவதாயில்லை.
சமாதானத்திற்கான சைகையுமில்லை.
தும்மல் தொடக்கம் இழுப்புவரை,
சலரோகம் உட்பட சகலவியாதியும்
இப்போ சமாதானத்திற்கு.
வாடிப்போன வெண்புறாவிற்கு வேண்டுவது
வெறும்கூசா நீரல்ல
விற்றமின் நிறைந்த குளுக்கோசு.
இல்லையேல் ஓடிப்போகும் ஒளிந்து போகும்.
ஏன் அழிந்தே போகலாம்.
ஓலமிட்டு ஒப்பாரி வைத்தாலும்
அடக்கம் செய்ய யாரும் வரார்.

வெல்லப்போகும் கூட்டம்
இலங்கை செல்லப்போகும் திசையை
இடித்துரைத்தாலும்
சிங்களம் சிந்திப்பதாயில்யை.
கனவோடு வாழ்ந்ததனால்
அகிலம் தன்னோடு அணிதிரளும் என்ற எண்ணம்.
இது வீழ்தலின் அறிகுறி.
முடியப்போகும் அதர்ம அடையாளம்.

கோட்பாடு தாண்டிய கோதாரி காதல்
சாதல் என்றாயிற்று.
மீண்டும் மீண்டும் சம்பிரதாயமற்ற
சம்பந்த கலப்பு.
உரித்தை மறுத்து சீதனம்.
அதிலும் இழுபறி.
கோடி வேண்டாம்,
ஓடிஆடி பாட்டன் பரம்பரைபாடி
வாழ்ந்த பூமி மட்டும் போதும் என்ற போதும்
விடுவதாயில்லை.

கட்டாய கலியாணம் கடைசியில்
விவாகரத்து.
விதியின் தீர்ப்பு இது.
சிங்களத்திற்கு சினப்பு
இதுவே எங்களுக்கு சிறப்பு.
சிறீலங்காமாதாவின் ஏமாற்றம்
தமிழ்த்தாயின் ஏற்றம்.

நிமிர்தலின் குரல் கேட்கிறது
மணிஓசை ஒலிக்கிறது
தீபங்கள் ஒளிர்கிறது.
சுகப்பிரசவம் உறுதியாயிற்று.
மண்ணில் மெல்ல சரிந்தவர்
விண்ணில் ஒளியாய் தெரிபவர்
தவழ்ந்து விளையாடி மடிமீது தூங்குபவர்
தாய்முலையில் தாகம் தீர்க்கும்
காலம் கனிகிறது.

1 Comments:

At 10:49 PM, Anonymous Anonymous said...

Hi,

Check this Sri Lankan video out:

http://youtube.com/watch?v=cgBAHJvxbqE

 

Post a Comment

<< Home