தமிழ்த் தேசியவாதி

Thursday, August 13, 2009

தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன?

கருத்தியல் என்பது உணர்வுகள், சிந்திப்புகள் ஊடாக உருப்பெற்று செயற்பாட்டு நிலையை நோக்கி பயணிக்கின்ற போது, வரலாறாக மாற்றம் பெறுகின்றது. வரலாற்றின் வழி செல்லும் நாம், சாதகமான பாதைகள+டாக பயணிப்பது மட்டுமன்றி, சவால் மிகுந்த களங்களையும் எதிர்நோக்குகிறோம்.

அத்தகையதொரு நெருக்கடி மிகுந்த சூழலுக்குள்ளேயே, தமிழ் தேசிய உரிமைப் போராட்டமும் சிக்கியுள்ளது. அண்மைக்காலமாக, தொடர்ச்சியான பின்னடைவுகளை சந்தித்து வருகிற தமிழ் தேசியப் போராட்டத்திற்கு அச்சாணியாக, ஒகஸ்ட் 8ம் திகதி இடம்பெற்று முடிந்த யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நசரசபை தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

தமிழ் தேசிய உரிமைப் போராட்டத்தை வேரோடு அழிக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக, தேர்தலை ஒரு கருவியாக பயன்படுத்திய அரசாங்கத்துக்கு, தக்க பதிலை, அதே தேர்தலினூடாக தமிழ் மக்கள் வழங்கியுள்ளார்கள். இது ஒரு சுதந்திரமானதொரு தேர்தலாக இல்லாத போதும், கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல்.

தேர்தலை நடத்துவதற்கான அக, புறச் சூழல்கள் அறவே இல்லாத ஒரு சந்தர்ப்பத்திலேயே, இந்த தேர்தலை ராஜபக்ச அரசாங்கம் நடத்தி முடித்தது. இராஜபக்சவின் குடும்ப ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக, கட்சியை வெற்றி பெறச் செய்யும் நோக்கோடு, தேர்தல் முறைகேடுகள், மோசடிகள் தாரளமாகவே இடம்பெற்றுள்ளன. சட்டத்திற்கு புறம்பான வகையில், அரச சொத்துக்கள் வெற்றிலை சின்னத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கபட்டுள்ளனர். ஆகமொத்தத்தில், யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நசரசபை தேர்தல்கள் சுதந்திரமானதும் நீதியானதுமாக அமையாவிட்டாலும், தமிழ் தேசிய உரிமைப் போராட்டத்தின் மீது தமிழ் மக்கள் வைத்துள்ள பற்றுறுதியை மீண்டுமொருமுறை வெளிப்படுத்தியுள்ளது.

இதில் பிரதான அம்சம் யாதெனில், வெல்லப்பட்ட வாக்குகள் என்பதை விட, அளிக்கப்படாத வாக்குகள் சொல்லும் செய்தி கனதியானது.

சுமார் ஒன்றரைத் தசாப்த காலமாக இராணுவ அடக்குமுறைக்குள் வாழ்கின்ற போதும், தமது அரசியல் அபிலாசையை தமிழ் மக்கள் மிக மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள். சர்வதேச சமூகமும், புலம்பெயர் தமிழர்களும் கூட பெருமளவில் எதிர்பார்த்திராத திருப்பத்தை, அண்மையில் நடைபெற்ற தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது. அடக்குமுறைக்குள் வாழ்கின்ற போதும் தமிழர் உரிமைப் போராட்டம் மீது தமக்கிருக்கும் அடங்காப்பற்றை அவர்கள் திட்டவட்டமாகத் வெளிப்படுத்தியுள்ளார்கள். ஒரே தடவையில், ஒரு செயற்பாடினுடாக பல தரப்பினருக்கு ஒரு ஆணித்தரமான செய்தியை எமது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

தேர்தல் முடிவுகள் தொடர்பாக, வடபகுதியில் அரச திணைக்களத்தில பணியாற்றும் நண்பர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “எத்தகைய அடக்குமுறைக்குறைகளைப் பிரயோகித்தாலும், விடுதலை மீதான எமது வேட்கையை தணிய செய்யவோ அல்லது எம்மை பணியவைக்கவோ முடியாது. எமது நடமாட்டங்களை கட்டுப்படுத்தலாம், பட்டினியால் எம்மை வருத்தலாம், ஆனால், எமது விடுதலை மீதான எமது உணர்வினை அழிக்கமுடியாது. தமது கைகளுக்கு கட்டுப்போடப்பட்டுள்ளதே தவிர கண்களுக்கல்ல. சந்தர்ப்பம் வரும்போது செய்ய வேண்டியதை செய்வோம் என பேர்நிறுத்த காலப்பகுதியிலே இராணுவத்தினர் எம்மை மிரட்டினார்கள். அடக்குமுறையாளர்களுக்கு நாம் இன்று சொல்கிற செய்தி யாதெனில், எம்மை அடக்குமுறைக்குள் உட்படுத்தலாம், ஆனால் எமது தாயகம் மீதான உணர்வினை சிதைக்க முடியாது. சந்தர்ப்பம் கிடைக்கும் தருணங்களிலெல்லாம் அதை வெளிப்படுத்துவோம் ” என்றார் அவர்.

ஏலவே குறிப்பிட்டது போல இது தனித்து சிங்கள இனவெறி அரசுக்கு மட்டும் சொல்லப்பட்ட விடயம் அல்ல. அதையும் தாண்டி, தமது சுயத்தை இழந்து, சூழ்நிலை கைதிகள் போல்; சிங்கள ஆட்சியாளர்களோடு கைகோத்து வலம்வரும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் சொல்லப்பட்டுள்ள சேதியாகும். தேர்தல் முடிவுகள் தொடர்பாக கவலையடைந்துள்ள அமைச்சர் டக்களஸ் தேவானந்தா, இதை ஒரு தோல்விபோலவே தான் கருதுவதாக கருத்து தெரிவித்துள்ளார். உண்மையில், இவர் மக்களுக்கு சேவைசெய்ய வேண்டுமானால், கவலையடைவதை விட்டுவிட்டு, மக்கள் சொன்ன செய்தியை சரிவர புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு செயற்பட முன்வர வேண்டும்.

சிங்கள பேரினவாதம், தமிழ் தேசியத்தை வேரறுக்க கங்கணம் கட்டி நிற்கும் நிலையிலே, அதனை முறியடிக்க அனைத்து தமிழர்களும் ஓராணியில் திகழவேண்டும் என்பதையே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் என்பதை, பிளபுபட்டுப்போயுள்ள தமிழ் அரசியல்வாதிகள் உணர வேண்டிய அவசிய சூழல் உருவாகியுள்ளது. ஜனநாயக கட்டமைப்புகளையோ, விழுமியங்களையோ மதிக்காத சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்திருப்பதால், தமிழ் மக்களுடைய உரிமையை மீளப்பபெற்றுக்கொள்ள முடியாது. மறுபுறத்தே, தமிழின அழிப்பு அரசாங்கத்துடன் இணைந்திருப்பதானது, எமது இனத்தை அழிப்பவர்களுக்கு துணைபோவதாகவே அர்த்தப்படும். கட்சியின் சின்னத்தை இழந்தவர்கள் நாளை மாறாப்போகும் காட்சியில் மிகப்பெரிய அச்சுறுத்தல்களை எதிர்நோக்கவேண்டி வரலாம்.

அடுத்து, 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலுக்கும் ஆகஸ்ட் 8ம் திகதி இடம்பெற்ற தேர்தலுக்குமான பொது உடன்பாடு யாதெனில், இரண்டு தேர்தல்களிலுமே, ஐக்கிய தேசிய கட்சியை தமிழ் மக்கள் நிராகரித்துள்ளார்கள். 2005 நவம்பர் தேர்தலில், விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலாலேயே தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணித்தார்கள் என்றும், அதன் காரணமாகவே ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைந்ததாகவும், சர்வதேச சமூகத்தினர் உள்ளடங்காலாக பல்வேறு தரப்பினரும் கருத்துருவாக்கம் ஒன்றை மேற்கொண்டார்கள், இந்த தேர்தலில் மக்கள் தமது சுயவிருப்பத்தை மீண்டும் வெளிப்படுத்தியதன் பின்னராவது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை புரிந்து கொண்டு அதனை அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலிலே, யாழ்ப்பாணத்தில் 82 வாக்குகளையும் வவுனியாவில் 223 வாக்குகளையும் மட்டுமே ஐக்கிய தேசிய கட்சியால் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. இது ஐக்கிய தேசிய கட்சி சந்தித்த தேர்தல்களில் மிக மோசமான தோல்வியாகும்.

முதுபெரும் அரசியல்வாதி என்று சொல்லப்படுகிற வீ.ஆனந்தசங்கரி அவர்களால் 424 விருப்பு வாக்கினை மட்டுமே பெறமுடிந்துள்ளது. இது இவரது சாதகமான எதிர்பார்;ப்பிற்கு நேரேதிர் மாறானதாகவே அமைந்திருக்கும். ஆனால், ராஜபக்ச அரசாங்கத்தின் அநீதிகளையும் அட்டூழியங்களையும் சுட்டிக்காட்ட தொடங்கியிருப்பதால், இவருக்கான ஆதரளவு தளம் தற்போது சாதகமான முறையில் மாற்றம் அடைவதை அவதானிக்க முடிகிறது. அதை உணர்ந்து செயற்படுவதனூடாக ஆரம்பகாலத்தில் அவருக்கிருந்த ஆதரவுத் தளத்தை மீண்டும் கட்டியெழுப்பலாம்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பொறுத்தவரை அமோக வெற்றியொன்றை எதிர்பார்த்திருந்தது. அதற்காக பல நாடகங்களையெல்லாம் நடத்தி முடித்தது. ஏ 9 பாதை திறப்பு தொடக்கம் மீள்குடியேற்றம் என பல பசப்பு நாடகங்கள் ஆடப்பட்டது. ஆனால், மக்கள் உரிய பாடத்தை புகட்டியுள்ளார்கள். பாரிய தேர்தல் முதலீட்மை மேற்கொண்டு மாபெரும் வெற்றியை எதிர்பார்த்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு ஆக மொத்தமாக கிடைத்த வாக்குகள் 10,602. இதனூடாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு 13 ஆசனங்கள் கிடத்துள்ளன. அதில் 4 ஆசனங்கள் முஸ்லீம் வேட்பாளர்களுக்கு சென்றுள்ளது. அப்படியாயின் சுமார் 3000 - 4000 வாக்குகள் புத்தளத்தில் வாழ்ந்து வரும் முஸ்லீம் மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகளாக இருக்கக்கூடும். அந்த வகையில் பார்க்கப் போனால், ஈபிடிபியினருக்கு கிடைத்திருக்கக் கூடிய அதிககூடிய வாக்குகள் 7 ஆயிரம் மட்டுமே. இது தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வாக்குகளையும் விட குறைவானது. அது மட்டுமன்றி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வேட்பாளர் மு.ரெமிடியாஸ் அவர்களே அதிககூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். இவர் மூத்த அரசியல்வாதி வீ.ஆனந்தசங்கரி அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளை விட சுமார் பத்து மடங்கு அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். அதேவேளை, மு.ரெமிடியாஸ் அவர்களின் விருப்பு வாக்கானது, ஈபிடிபியினர் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளில் 50மூ தையும் விட அதிகமானது,

இவையெல்லாம், ஒட்டுமொத்தமாக சொல்லும் சேதி யாதெனில், யாரும் வராலம் போகலாம். எத்தகைய சலுகைகளையும் வழங்கலாம். மக்களை ஒடுக்குமுறைக்குள் வைத்திருக்கலாம். ஆனால், தமிழ் மக்கள் சுமந்துள்ள தாயகவிடுதலைiயென்ற இலட்சியத்தையும், சுதந்திரக் கனவையும் யாராலும் தகர்க்க முடியாது என்பதாகும். தாம் என்றும் தமிழ் தேசிய உரிமைப் போராட்டத்தின் பக்கமே நிற்போம் என்பதை, வாக்களித்ததனூடாகுவம், வாக்களிக்காததனூடகவும் திட்டவட்டமாக தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அதேவேளை, சோர்வடைந்து விடாமல், தன்னம்பிக்கை தளராமல் உரிமைப் போராட்டம் வெல்லும் வரை தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுங்கள் என்பதையே, அடக்குமுறைக்குள் வாழ்கின்ற எமது மக்கள், புலம்பெயர் தமிழ் மக்களுக்கு தாம் அளித்த வாக்குகள் ஊடகவும், செலுத்தப்படாத வாக்குகள் ஊடாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

ஆகமொத்தத்தில், மக்களின் அரசியல் அபிலாசைகளைப் புரிந்து கொண்டு மக்களுக்கான உரிமைப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையே நடந்து முடிந்த தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது. மக்கள் மயப்பட்டபோராட்ம் தோல்வியடையாது. அடுத்த கட்ட அரசியல் போராட்டத்திற்கு தயாராகின்ற தமிழ் தேசியம் இதனை அடிப்படையாகக் கொண்டு போராட்டத்தை முன்னெடுக்கப்படுவதனூடாக, தமிழ் மக்களின் இலட்சிய பயணத்தை அடையமுடியும்.

1 Comments:

At 11:17 PM, Blogger www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

 

Post a Comment

<< Home