தமிழ்த் தேசியவாதி

Monday, October 23, 2006

காலம் கனிகிறது…- இரத்தின’மை’

உயிர் நிழலாக உதிரம் மையாகா
பயிர் வளர்த்தோம்.
விதியென்றும் வினையென்றும் விம்மாமல்
ஏமக்கென்றொரு வாழ்வமைக்க விரைந்தோம்.
நெருப்பாறும் நெடும்காடும் இடைவந்த போதும்
விடுதலையில் விருப்பு கொண்டதால்
நிமிர்வோடு நடந்தோம்.

பயணத்தின் பாதிவழியில்
நியாயத்தின் போதிமரம் என
சொன்னோரை சந்தித்தோம்.
அவர்கள்,
பலவர்ணசாயம் பூசிய
தித்திப்பான முட்டாய்களை காட்டி
எமது மீதிப்பயணத்தை முடக்க நினைத்தார்கள்.

மானுடதர்மத்திற்காய்
உடல்களில் வெடிகுண்டு சுமக்க தயங்காதவர்
அடக்கத்தோடு சொன்னோம்,
சிலுவைகளை சுமக்கிறோம் என்பதன் அர்த்தம்
சித்திரவதைகளை விரும்புகிறோம் என்பதல்ல.
உரியவர்கள் புரியமறுத்தார்கள்.

ஒரே அளவுகோலிலேயே
அடக்குமுறையையும் சுதந்திரத்தையும்
கணித்தார்கள்.
பணியமறுத்தமையினை வர்ணித்தவர்கள்
கிரகிக்க மறந்தார்கள்.

காலத்தின் சலிப்பும்
கரிகாலனின் பொறுமையும்
எல்லையை தொடும் தருணத்தில்.
எதிர்வினைகள் எதுவாயினும்
பொறுப்புக்கூறவேண்டியோர் நாமல்ல.
மீன்பெட்டிகளும் நெல்லுமூட்டைகளும்
குண்டு சுமக்க விரும்பியதில்லை.
இனவேரறுப்பு தெளிவாய் தெரிந்தபின்
ஆண்டபரம்பரை அலட்சியம் செய்யுமா?

சுனாமி கட்டமைப்பு செத்தபின்பும்
இனவாத கூட்டமைப்பு வந்தபின்பும்
சாமிசரணம் சொல்லிஆமியே போய்விடென்று
அமைதியாய் விடைகொடுத்தோம்.
அவனும் அசைவதாயில்லை.
சமாதானத்திற்கான சைகையுமில்லை.
தும்மல் தொடக்கம் இழுப்புவரை,
சலரோகம் உட்பட சகலவியாதியும்
இப்போ சமாதானத்திற்கு.
வாடிப்போன வெண்புறாவிற்கு வேண்டுவது
வெறும்கூசா நீரல்ல
விற்றமின் நிறைந்த குளுக்கோசு.
இல்லையேல் ஓடிப்போகும் ஒளிந்து போகும்.
ஏன் அழிந்தே போகலாம்.
ஓலமிட்டு ஒப்பாரி வைத்தாலும்
அடக்கம் செய்ய யாரும் வரார்.

வெல்லப்போகும் கூட்டம்
இலங்கை செல்லப்போகும் திசையை
இடித்துரைத்தாலும்
சிங்களம் சிந்திப்பதாயில்யை.
கனவோடு வாழ்ந்ததனால்
அகிலம் தன்னோடு அணிதிரளும் என்ற எண்ணம்.
இது வீழ்தலின் அறிகுறி.
முடியப்போகும் அதர்ம அடையாளம்.

கோட்பாடு தாண்டிய கோதாரி காதல்
சாதல் என்றாயிற்று.
மீண்டும் மீண்டும் சம்பிரதாயமற்ற
சம்பந்த கலப்பு.
உரித்தை மறுத்து சீதனம்.
அதிலும் இழுபறி.
கோடி வேண்டாம்,
ஓடிஆடி பாட்டன் பரம்பரைபாடி
வாழ்ந்த பூமி மட்டும் போதும் என்ற போதும்
விடுவதாயில்லை.

கட்டாய கலியாணம் கடைசியில்
விவாகரத்து.
விதியின் தீர்ப்பு இது.
சிங்களத்திற்கு சினப்பு
இதுவே எங்களுக்கு சிறப்பு.
சிறீலங்காமாதாவின் ஏமாற்றம்
தமிழ்த்தாயின் ஏற்றம்.

நிமிர்தலின் குரல் கேட்கிறது
மணிஓசை ஒலிக்கிறது
தீபங்கள் ஒளிர்கிறது.
சுகப்பிரசவம் உறுதியாயிற்று.
மண்ணில் மெல்ல சரிந்தவர்
விண்ணில் ஒளியாய் தெரிபவர்
தவழ்ந்து விளையாடி மடிமீது தூங்குபவர்
தாய்முலையில் தாகம் தீர்க்கும்
காலம் கனிகிறது.

வெள்ளை மாளிகையின் கள்ளர் கூட்டத்திற்கு,

வணக்கம்

ஒரு நாட்டினுடைய இறைமையை பாதுகாக்கவும் வன்முறைகளை நிறுத்தி அமைதியை நிலைநாட்டவும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளை வரவேற்கிறோம். அந்த முயற்சிகள் இதயசுத்தியுடனானதாக இருக்கவேண்டுமென்பதோடு சந்தேகங்களை உண்டுபண்ணுவதாக இருக்கக் கூடாது. அத்துடன் அது நியாயமானதாகவும் இருக்கவேண்டும் என்பதே நீதியை எதிர்பார்க்கும் எல்லோருடையதுமான கருத்து.

ஆனால, உங்களுடைய கருத்துக்களும் செயற்பாடுகளும் அநீதிக்குக்கு ஆதரவாகவும் மனச்சாட்சிக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கிறது. உலக விவகாரங்களையும் அதில் உங்களுடைய வகிபாகத்தையும் தொடர்சியாக அவதானித்துக்கொண்டு வருபவர்கள் உங்களிடம் இருந்து நீதியை எள்ளளவு கூட எதிர்பார்க்க முடியாது என்பதை உறுதிபட உணரமுடிகிறது.

இலங்கைத் தீவினுடைய சமாதான முயற்சிகளுக்கு பக்கதுணையாக இருப்பீர்கள் என இருந்த மிச்ச சொச்ச நம்பிக்கைகளும் அடியோடு அற்றுப்போய்விட்டது. அதற்கான காரணத்தை மிக அண்மையில் நீங்கள் கூறிய கருத்துக்களிருந்தே அலச ஆரம்பிப்போம்.

கடற்படையினர் மீது கபரணவில் நடத்தப்பட்ட தாக்குதலால் அதிர்ச்சி அடைந்து போயுள்ள அரச தரப்பை ஆசுவாசப்படுத்தும் முகமாக வெளியிட்டது போலுள்ளது அந்த அறிக்கை.

1) 90 பொதுமக்களும் மற்றும் கடற்படையினரும் கொல்லப்பட்டதாக கூறியுள்ளீர்கள்.

2) தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளையும் வன்முறைகளையும் கைவிட்டு சமாதான நடவடிக்கைகளில் முனைப்பு காட்டவேண்டும் என்ற சாரப்பட தெரிவித்துள்ளீர்கள்.

United States Condemns Suicide Bombing in Sri Lanka
Media Release17 October 2006

Statement by Sean McCormack, Spokesman, U.S. Department of StateThe United States condemns yesterday’s suicide attack near Habarana, Sri Lanka that killed more than 90 civilians and members of the Sri Lankan Navy. We extend our deepest sympathies to the families of the victims.

Though there have been no claims of responsibility, this attack is in keeping with the tactics of the Liberation Tigers of Tamil Eelam, a group long designated as a Foreign Terrorist Organization by the Department of State. As we and others in the international community have made clear, the LTTE must renounce the use of terror. Only through the cessation of violence, a renewed commitment to peace talks, and constructive engagement by both sides can a political solution to this conflict be achieved.

சிறீலங்காவினுடைய படைத்துறை சார்ந்தோரே தமது தரப்பில் கொல்லப்ப்டோர் கடற்படையினர் என வெளிப்படையாக கூறியுள்ள போது நீங்கள் ஏன் பொல்லை கொடுத்து அடி வாங்க முற்படுகிறீர்கள்? தேவையாயின் http://www.defence.lk/ என்னும் இணையத்தளத்தை பார்வையிடவும். அவ்வாறான தேவை எற்படாதென நம்புகிறேன். ஏனெனனில் உங்களுத்தான் உண்மைகள் அனைத்துமே தெரியுமே. நீங்கள் நித்திரை கொள்பவர் போல் நடிப்பவரே தவிர உண்மையில் நித்தரையில்லை என்பது புரிகிறது. தெரிந்தும் எங்களுக்க சொல்ல வேண்டிய அவசியம்முள்ளதால் நினைவுபடுத்த விரும்புகிறோம்.

சரி உயிரை தற்காப்பதற்கான நடவடிக்கைகள் பயங்கரவாதம் என்றால் உயிரை அழிக்கும் நடவடிக்கைகளுக்கு உங்கள் அகராதியில் என்ன வரைவிரக்கணம். செஞ்சோலையில் பிஞ்சுகளை அரச பயங்கரவாதம் குதறிய போது எங்கே இலங்கைத் தீவு மீதான உங்கள் பார்வை? சிறுவர்களை படைக்கு சேர்ப்பதாக ஒப்பாரி வைக்கும்நீங்கள் அப்போது ஏன் சிலைபோல் பேசாது இருந்தீர்கள்?

உங்கள் கண்களில் பள்ளி மாணவிகள் பயங்கரவாதிகள் ஆயுதம் தரித்த அரச பயங்கரவாதிகள் அப்பாவிகள். நீங்கள் என்ன தாய்ப்பால் குடித்து வளர்ந்த மனிதர்களா அல்லது தானியங்கி றோபோக்களா? றோபோக்கள் கூட மனச்சாட்சிப்படி இயங்கக் கூடும், ஆனால் நீங்கள்….சீ….

ஆயுதம் தரிக்காத படையினர் மீதான தாக்குதல் என குறிப்பிட்டிருந்தீர்கள். கீழுள்ள படத்தைப் பாருங்கள் உண்மை உறைக்கும். ஆக அந்த ஆயுதங்கள் ஒரு பேரூந்தில் பயணித்தவர்களுக்கு மட்டுமே உரியது என்பதையும் கவனத்திற்கொள்க.

சரி உங்கள் திருப்திக்காக ஆயுதம் தரிக்காத படையினர் என குறிப்பிட்டாலும் சிறீலங்காவின் இராணுவ விவகாரப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெலவின் கூற்றுப்படி ஆயுதம் தரிக்காத படையினரை கொல்வதில் தவறில்லை. ஏனெனில்,மாணவர்களாக இருந்தாலும் புலிகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தால் அவர்களும் பயங்கரவாதிகளே. அவ்வறானவர்களை கொல்வதில் எந்த தவறும் இல்லையென குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறியின் எங்கள் கடலில் எங்கள் கடற்றொழிலார்களையும் உயிரை கையில் பிடித்தபடி உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக இந்தியா செல்லும் அப்பாவிகளையும் பேசாலை அல்லைப்பிட்டி என எங்கும் அப்பாவி மக்களை கொல்லும் ஆயுதம் தரித்த கடற்படையை கொல்வதில் தவறொன்றும் இல்லை. உபதேசம் செய்வதற்கு உங்களுக்கென்றொரு தகுதி வேண்டு;ம் உங்களுக்கு அந்த தகுதி ஆபிரிக்கம் லிங்கன் மறுபிறப்பெடுத்தால் கூட கிடைக்காது.

கியூபாவின் ஜனநாயக குரல்வளையை நெரிக்க முனைந்து, ஆப்கானிலும் ஈராக்கிலும் இரத்த ஆறை ஓடவைத்து ஈரானையும் தென் கொரியாவையும் மிரட்டிக் கொண்டிருக்கும் உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது ஜனநாயகத்தை பற்றி கதைக்க? சிறீலங்கா என்ன சின்ன இஸ்ரேலா உங்களுக்கு? நாட்டின் இறைமை பற்றி பேசும் நீங்கள் இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தும் போதும் என்ன செய்தீர்கள்? பாகிஸ்தானின் இராணுவ ஆட்சிக்கு பாலூட்டும் நீங்கள் தாய்வானை பார்த்து ஏன் முறைத்தீர்கள்? உங்கள் சொல் கேட்டால் நல்லவர்கள் இல்லையேல் பயங்கரவாதிகள்.

நாங்கள் ஒன்றும் எண்ணைக்காக அப்பாவி மக்களின் இரத்த ஆறை ஓடவைக்கும் கூட்டம் அல்ல. எங்கள் கௌரவமான வாழ்வுக்காக நீங்கள் ஒரு மேற்கெண்டதைப் போன்று சுதந்திர போராட்டமே நடத்துகிறோம். ரீச்சாட் பவுச்சர் கூறியது போல எங்களுக்கும் சுயநிர்ணயத்துடன் வாழ்வதற்கான உரிமையுண்டு. அந்த உரிமையை வென்றெடுப்தற்காக எத்தகைய சவால்களையும் சந்திக்க தயாராக உள்ளோம். சாவால்கள் ஒன்றும் எமக்கு புதியவை அல்ல. போராடினார்கள் வென்றார்கள் என்று இருக்குமே தவிர மண்டியிட்டார்கள் என்று என்றைக்குமே இருக்காது. எமது போராட்ட வடிவமும எதிரியை எதிர்த்து நிற்பதற்கான திடமும் பலஸதீனத்தைப் போலவோ மொன்றி நிக்கவோ போல் இருக்கப்போவதில்லை. ஓரு நவீன வியட்னாத்தைப் பார்த்தது போலவே எமது எதிர்த்து நிற்கும் பலம் சுதந்திரம் அடையும் வரையும் இருக்கும். CIA,FBI,RAW,ISI,MI5 போன்றவற்றைக் கேட்டால் வளைந்து கொடுக்காத எமது வரலாற்றுப் பயணத்தை சொல்லும்.

விடுதலைப் புலிகள் மீண்டும் போரில் ஈடுபட்டால் வலிமை பொருந்திய இராணுவத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் என முன்னர் ஒரு தடைவ குறிப்பிட்டிருந்தீர்கள். இஞ்சாருங்கோ அண்ணாச்சிமாரே வடிவா கவனியுங்கோ, எங்களை மிரட்டிப் பணியவைக்கலாம் என்பதை கனவிலும் நினைக்காதேங்கோ. உப்பிடி பலதடவை சிலபேர் மிரட்டிப் பார்த்தவை. உறுதிப்படுத்த உதாரணம் தேவையென்றால் தலைவரின் வரலாறு தொடர்பான “தலைநிமிர்வு” வரலாற்றுப் பொக்கிசத்தைப் பாருங்கள். குனியாத வீரம் எங்கள் குலத்தின் அடையாளம் என்பது புரியும். நாங்கள் பின்னடைவுகளை சந்தித்து இருக்கிறோமே தவிர பாரிய படுதோல்விகளை சந்தித்ததில்லை. பத்துப் பேராக இருந்த காலம் தொடங்கி 10 ஆயிரத்தை தாண்டியப பின்னும் அப்படித்தான். போராட்ட வடிவங்கள் மாறியதே தவிர போராட்ட இலட்சியத்தில் எந்த மாற்றமும் இல்லை. சங்கர்,செல்க்கிளி அம்மான்,சாள்ஸ் அன்ரனி தொடங்கி அக்பர் வரைக்கும் இழப்புகளை சந்தித்துள்ளோம். அதனால் நாம் சேர்ந்து போகவில்லை. வீழ்ந்தவர்கள் செத்துப் போனதாக நாம் உணரவில்லை அவர்கள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு வித்தாகிப் போயுள்ளார்கள். எங்கள் இதயக் கோவில்களில் வைத்துப் பூசிக்கப்படவேண்டிய அந்த மகத்தான மாவீரர்களின் தியாகம் எமது போராட்டத்தின் அத்திவாரமாகியுள்ளது.

உங்கள் ஜனாதிபதி புஸ் பதவிக்கு வரும் போது எதிர்காலத்தில் சவாலாக விளங்கக் கூடிய ஒரு நாட்டின் பூகோள அமைப்போ பிரதமரின் பெயரோ தெரியாமல்தான் பதவிக்கு வந்தவர். ஆனால் நாங்கள் யாரென்பது உங்களுக்கு தெரியும்தானே???

அப்படிப்பட்ட நீங்கள் எங்களை மிரட்டுவதா? நீங்கள் என்னத்தை கதைத்தாலும் எதைக்கொடுத்தாலும் பெரும்பாலும் சிங்களப்படைகள்தான் களத்தில் எம்மோடு மோதும். அவர்களின் சுவாசத்தை நிர்ணயிப்பவர்கள் நாங்களே என்பது அவர்களுக்கே புரியும் தேவையென்றால் சில உதாரணங்களை சொல்கிறேன்.

• 1995 ஜீலை 28 ல் மணலாற்றில் எங்களுக்கு எமது 180 மாவீரர்களின் வித்துடல்களை அனுப்பியதற்கு பதிலாக ஒரு வருடம் ஆக முதலே 1996 ஜீன் 18ல் 1800 படையினருக்கு சமாதி கட்டினோம்.

• உங்கள் கிறீன்பரட் பயிற்சி எடுத்த சிறீலங்காவின் சிறப்பு படையினர் சுமார் 200 பேரை முதல் தாக்குதலிலேயே அடுத்த பிறப்பெடுக்க அனுப்பி வைத்தோம்.

• கட்டுநாயக்காவில் வித்தைகாட்டி போரியல் வல்லுனர்களையே திகைப்பில் ஆழ்த்தினோம.

• குடாரப்பு தரையிறக்கம் மூலம் உங்கள் தலைமுடிகளை உதிர வைத்தோம்.

• நீங்கள் நினைத்தாலே கைப்பற்ற கடினமெனக் கூறிய ஆனையிறவை நீங்கள் கருத்து தெரிவித்த இருவாரங்களுக்குள் கைப்பற்றி புதுவை அண்ணை கூறியது போல் 240 வருடகால முதுகு கூனலை நிமிர்த்தினோம்.

• தீச்சுவாலை மூலம் எமது மரபுப் போரின் தனித்துவத்தை அடித்துச் சொன்னோம்.

இவை சில உதாரணங்ளே இனிவரும் காலம் அடிக்கடி இடித்து சொல்லும். வல்வெட்டிதுறை தொடங்கி அம்பாந்தோட்டை வரைக்கும் எதிரியின் அவலக்குரல் கேட்கும்.

தலைவர் கூறியது போல் அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பி கொடுக்க வேண்டிய சூழல் நெருங்கி வருகிறது.

இத்தகைய சூழலிலும் மிக அழுத்தமாக ஒரு விடயத்தை கூறவிரும்புகிறோம். நாம் அமைதியை மிக மிக ஆழமாக நேசிக்கிறோம். அத்தகைய அமைதி வரும் நாளை ஆவலோடு எதிர்பார்ர்த்திருக்கிறோம்.

நீதியான சமாதானத்துக்காக இனியாவது உங்களால் இயன்றதை செய்து கடந்த கால பாவங்களுக்கு பிராயசித்தம் தேடுங்கோ. ஆ..மறந்தே போனன் கதையோடு கதையாக சீன் மக்கோமக்குக்கும் இவற்றை சொல்லி விடுங்கோ.

பிரபாகரன் கணக்கு என்றும் பிழைக்காது அவர் படைகள் என்றும் குனியாது.
மலரப்போகும் தமிழீழம் நிமிர்ந்து நின்று உங்களையும் கைநீட்டி வரவேற்கும்.
நன்றி.
அன்புடன்,
சிவஒளி.

Wednesday, October 18, 2006

ஒரு தமிழனின் குரல்! ஐயா அகாசிக்கு ஒரு யாழ் வாசியின் மடல்.

அன்புள்ள அகாசி ஐயாவுக்கு!

வணக்கம்.

நீண்ட அமைதிக்கு பின்னர் உங்கள் குரல் கேட்க முடிந்தமை மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இலங்கைத் தீவினுடைய இன மோதுகைக்குகு அரசியல் ரீதியாக தீர்வுகாண வேண்டுமென்பதில் முனைப்போடு செயற்படுகின்றமைக்கு தமிழ் மக்களின் சார்பில் நன்றிகளும் பாராட்டுக்களும்.

நான் சொல்ல முனைகின்ற விடயத்தை, மிக விரைவாகவும், சுருக்கமாகவும் அனேகமாக இறுதித்தடவையாகவும் கூறமுற்படுகின்றேன். ஏனெனில், எங்கள் சூழல் அத்தகையது. அத்தகைய சூழலுக்குள் எங்களை தள்ளியவர்களிற்கான பொறுப்பு உங்களுக்கும் உண்டு.

நாங்கள் பொறுமையாக 4 ¾ வருடங்கள் கூறியது போதும் போதும் என்றாகி விட்டது. உங்களுடைய பொறுப்புணர்வையும் எங்களிற்கு புரிய முடிகிறது. எங்கள் கொல்லைப் புறத்திற்கு வர அச்சமுற்ற எதிரி இன்று எம் முற்றத்திற்கு வந்து நெஞ்சில் ஏற துணிகிறான். எங்கள் மண்ணில் வாழ வேண்டுவேண்டுமானலும் சரி அல்லது மாழ வேண்டுமானாலும் சரி எங்களிற்கென்று ஒரு பொறுப்பு இருக்கிறது. அத்தகைய பொறுப்பை எந்தக் காரணத்தினாலும் தட்டிக்கழிக்க முடியாது. எமது வாழ்வை நாமே நிர்ணயிப்பவர்களாக இருந்தால் மட்டுமே முழு மனிதனாக நாம் வாழ முடியும் என்பதை போர்நிறுத்த காலப்பகுதி மீண்டும் மீண்டும் குட்டிச் சொல்கிறது.

அதற்கான ஆயுதங்களை செய்ய வேண்டிய தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டுள்ளது. படுகொலைகள் தொடர்கிற, குண்டுகள் எம் மண்ணில் பொழிகிற, பொருளாதார தடைகள் ஏற்பட்டுள்ள குறிப்பாக அரசியல் ரீதியான எமது எதிர்பார்ப்புக்கள் அனைத்தையுமே தவிடுபொடியாக்கப்பட்டுள்ள நெருக்கடி மிகுந்த சூழலுக்குள் இருந்து கொண்டு இந்த மடலை எழுதுவதற்கு என்னை தூண்டியது, ஜீலை மாத இறுதிப்பகுதியில் நீங்கள் கூறிய கருத்துக்களே.

எந்தவொரு இராசதந்திரமும் உண்மைக்கு முன்னால் என்றோ ஒருநாள் மண்டியிட வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நீங்கள் வகுத்த நுட்பங்களின் விளைவு உலைக்கள வியாசன் எழுதியது போல் “பாவப்பட்ட சமாதானமென்ற சொல் மீதே கோபம் வருகிறது எமக்கிப்போ”

உங்களிற்கும் எங்களிற்கும் இடையில் ஒரு ஒற்றுமை உண்டு. இருதரப்புமே சாம்பலிலிருந்து எழும் பீனிக்ஸ் போன்ற வல்லமையுடையவர்கள். இது வரலாறு கண்ட யதார்த்தம். அந்த வரலாறுதான் எமக்கு வழிகாட்டியாகவும் நிற்கிறது. அப்படியிருக்க, எப்படி பொதுவான சில விடயங்களில் தனித்தனி நீதி இருக்க முடியும்.

1983 ஐPலை கலவரம் போன்ற கடந்த கால வன்முறை தாக்கங்களின் வரலாறுகளிலிருந்து தமிழர்கள் மீள வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆர்மிரேஐ;சோ, அல்பிரட் அம்மையாரோ இதைக் கூறியிருந்தால் சகித்திருக்கலாம் ஆனால்…………………..

60 ஆண்டுகள் கடந்தும் ஹீரோசிமா, நாகசாகி தாக்கத்தை நினைவுகூர்ந்து அனுஷ்டித்து, அதனை ஒரு படிப்பிணையாக கொண்டு வளர்ச்சியடைந்த நீங்கள் இப்படி கூறலாமா? உங்களிற்கு எதிராக நடந்தது போர். அது நீங்கள் விதைத்த விதையின் அறுவடை. எங்களிற்கு எதிராக நடப்பது இன ஒழிப்பு. எங்களிற்கும் தாங்களே அரசாங்கம் எனக் கூறிக்கொள்ளும் எங்கள் அங்கீகாரம் இல்லாத அரசாங்கத்தின் கோரமுகம். அதாவது அரச பயங்கரவாதத்தின் அடக்குமுறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இது உங்களிற்கும் தெரிந்ததுதானே. அதனால்தானே கதிர்காமருக்கு உங்களோடு மனக்கசப்பு ஏற்பட்டது. கிறிஸ்பற்றன் வருகைதந்த போது தனக்கு நெருங்கியவர்களிடம் இதனை கதிர்காமர் விரக்தியோடு கூறியதாக அறிந்துள்ளேன்.

அப்படியிருந்த நீங்கள், ஏன் திடீரென இப்படி மாறினீர்கள்…. அடிக்கடி நீங்கள் வருவதாக பேச்சுக்கள் அடிபடும் பின்னர் அது தடைப்பட்டுப் போனதாக செய்திகள் வரும். தற்போது மீண்டும் நீங்கள் வருவதாக செய்தி பரவுகின்றது. இது உங்களுடைய இலங்கைத் தீவுக்கான பதின்மூன்றாவது விஜயம். அதிஸ்டம் இல்லாத 4 என்று சொல்லுவினம் அதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் நியாயத்தின் பக்கம் நீங்கள் நிற்பீர்களானால்; அதிஸ்டம் அற்றது கூட என்றோ ஒரு நாள் வெல்லும். நீங்கள் என்ன போக்கில் வருகிறீர்கள் என்பது உங்களுக்கும் நீங்கள் சார்ந்தோருக்குமே வெளிச்சம். ஆனால் ஒரு விடயத்தை தெளிவாக கூறுகிறேன், எங்களை மிரட்டி எதையும் சாதிக்கலாம் என்பதை மறந்து விடுங்கள்.அது கற்பனையாகவும் கனவாகவுமே காலம் முழுக்க இருக்கும். இந்த நிலையிலேயே கடந்த ஜீலை மாத இறுதியில் நீங்கள் கூறிய கருத்துக்கள் மீதான ஒரு பிரதிபலிப்பை இங்கே வெளிப்படுத்த விரும்புகின்றேன்.

உண்மையில் இந்த பிரதிபலிப்பு உடனடியாகவே எங்களிடமிருந்து வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆயினும், எங்கள் வாழ்வியல் முறைமையில் ஏற்பட்டுள்ள மாற்றம் அதனை பின்தள்ளி விட்டது. தாமதமானாலும் தரமான விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் எப்போதும் உண்டென்பதால் சில விடயங்களை சுருக்கமாக அழுத்தமாக உங்களுக்கு கூற விளைகிறேன்.

சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய தறுவாயில் ஐப்பான் அரசு இருப்பதாகவும் அதனை தலைவர் பிரபாகரனுக்கு தெரியப்படுத்துவதாகவும் மற்றும் ஏனைய சில அரசுகள் எடுத்தமை போன்ற தெளிவாகப் புரியக்கூடிய சில நடவடிக்கைகளை எடுப்பது குறித்து பரீசிலித்து வருகிறோம் என நீங்கள் கூறியிருந்தீர்கள்.

நீங்கள் எடுக்க இருக்கும் முடிவு தொடர்பாக தலைவர் பிரபாகரனுக்கு, தெரியப்படுத்த இருப்பது நல்ல விடயம் அதேவேளை, இன்னோர் விடயத்தையும் நீங்கள் மறக்கக்கூடாது. உங்களுக்கு எப்படி முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் உள்ளதோ அதனை விட “மிக முக்கியமான சூழல்” எங்களுக்குள்ளது. முக்கியமான சூழல் ஊடாக முன்வைக்கப்படவுள்ள தீர்க்கமான முடிவு ஒட்டுமொத்த தமிழர்களின் இருப்பிற்கான பதிலைப் தரப்போகிறது. ஏனைய சில அரசுகள் எடுத்த தவறான முடிவினாலேயே இந்த கணம் வரை விடுதலைப் புலிகளை என்ன செய்யலாம் என எண்ணி விழிபிதுங்கி நிற்கின்றன. இவர்கள் எடுத்த இந்த முடிவுதான் தமிழர் தரப்பை சமாதானப் பேச்சுக்களிலிருந்து தூரத் தள்ளியது. அன்று உங்களைப்போல் சிந்தித்தவர்களே இன்று இத்தகைய கருத்துக்களை கூறுகிறார்கள். இப்படியிருக்க அகாசி ஐயா நீங்களுமா இப்படி???

தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடர்பாக சில கருத்துக்களை தெளிவாக புரிந்து வைத்துள்ள நீங்களா, எங்களுக்கு புரியும் படியான சில நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டீர்கள்.

எமது தாயகப் பரப்பில் UAV அதாவது உளவு விமானம் தலைக்கு மேலே சுற்றிக்கொண்டிருக்கின்ற, கிபீர் விமானம் குண்டுகளை “கொட்டிக்” கொண்டிருக்கின்ற, பல்குழல் உட்பட்ட எறிகணைகள் எங்கள் தேசத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கின்ற, பிசாசுகள் போல் சிங்கள கடற்படை அலைந்து கொண்டிருக்கின்ற, நாசகார அரசாங்கங்கள் எங்களை அழிக்க வேண்டும் என்பதற்காக ஒன்றிணைந்திருக்கின்ற இந்த வேளையிலும் நீங்கள் சொன்ன அந்த வரிகளை மிகத் திடமாக திரும்பவும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

எமது மக்களின் அவலத்தை தீர்ப்பதற்காக எமது உரிமையை வென்றெடுப்பதற்காக தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்விற்காக தன்னையே அர்ப்பணித்துள்ள தமிழர் தலைவர் பிரபாகரன் அவர்கள், கொள்கையில் உறுதிப்பாடுடைய ஒரு மகாபுருசர், தமது இலட்சியப் பயணத்தையிட்டு மிகத்தெளிவான செயல்திட்டத்தை வைத்துள்ளார் என்பதை நீங்கள் விரைவில் மீண்டும் உணரப் போகிறீர்கள்.

பசிக்கு உணவின்றி எங்கள் பிஞ்சு மழலைகள், பெண்கள்,முதியோர் உட்பட்ட மக்கள் தவித்துக்கொண்டிருக்கின்ற, மாளிகையில் வாழ்ந்த வம்சம் மரநிழலில் வாழ்கிறது.இதன் அர்த்தம் எமக்கு எம் மண்ணில் வாழ்கின்ற சுதந்திரம் வேண்டும்.அத்தகைய சுதந்திரம் கிடைக்கும் என்றால் காலம் முழுக்க எங்கள் வாழ்வு மரநிழழில் கழிந்தாலும் கவலையில்லை. சுமார் 3 இலட்சம் உறவுகளின் நிலை இதுதான்.எமது 3 தசாப்த கால விடடுதலை போராட்ட வரலாற்றில் இதனையும் விட அதிகமான அவலங்களை அனுபவித்திருக்கிறோம்.ஆனால் அது போரென நேரடி பிரகடனத்தோடு மேற்கொள்ளப்பட்ட காலம். இதுவோ போர்நிறுத்த காலம் என்று கூறப்படுகின்ற பகுதி.

ஏன் நிலைமை இப்படியானது?

தமிழர் தரப்பானது எதிரியானவன் கனவில் காணமுடியாத இராணுவ சாதனைகளை படைத்து எமது இராணுவ மேலாண்மையை சர்வதேச சமூகத்துக்கு நிரூபித்து காட்டிய போதே அந்த சர்வதேச சமூகத்தில் ஒருவராக நீங்களும் வந்தீர்கள். இப்படி உங்களைப்போல் பலவகையினர் பல்வேறு கோணங்களில். சிலர் கெஞ்சினார்கள், சிலர் மிரட்டிப்பார்த்தார்கள், பலர் அஞ்சினார்கள். எங்களுக்கும் “இராசதந்திரம்மும்” சாணக்கியமும் தெரிந்திருந்ததால் எல்லாவற்றிற்கும் சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்கின்ற அண்ணன் நீங்கள் உள்ளிட்ட உலக சமூகத்திற்கு பல சந்தர்ப்பங்களை தந்தார்,தந்துகொண்டிருக்கிறார்.

அதன் அடையாளத்தை அதற்குள் பொதிந்திருந்த அர்த்தத்தை முதுபெரும் இராசதந்திரி என்று சொல்லப்படுகின்ற நீங்களும் புரிந்து கொள்ளவில்லை. அதனால் உங்களுக்கென்றிருந்த அவகாசத்தையும் அநியாயமாக்கிவிட்டீர்கள்.இவற்றையெல்லாம் நீங்கள் உணர்ந்து மனச்சாட்சிப்படி நடப்பதென்பது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒப்பானது. ஆனால்,இதனை ஏன் கூறுகிறேன் என்றால் இதனால் உண்டான விளைவுகளும் இனி உண்டாகப்போகின்ற விளைவுகளும் உங்களுக்கும் விடுதலைப்போராட்டத்தின் தாற்பாரியங்களையும் அதன் அடிநாதத்தையும் விளங்கிக்கொள்ளாதவர்களுக்கும் ஒரு வரலாற்று பாடமாக இருக்கட்டும்.

போர்நிறுத்த அமுலாக்கம் என முழக்கமிட்ட உங்களால் ஒரு சமரையே நிறுத்த முடியாமல் போய்விட்டதே.உங்கள் போன்றவர்களிற்கல்லவா நாங்கள் சந்தர்ப்பத்தை தந்து போனோம்.எமக்குள்ள அமைதி மீதான ஆழமான நேசிப்பை வெளிப்படுத்த அடி மேல் அடியடித்த போதும் வலியை தாங்கிக்கொண்டு திருப்பி அடிக்காமல் இருந்தோமே? எங்கள் பிஞ்சுகளை அரச பயங்கரவாதம் கதறக் கதறக் குதறிக் கொன்ற போதும் வெஞ்சினத்தை அடக்கி பொறுமை காத்தோமே? 4 ¾ வருடகாலமாக பொறு பொறு என்றீர்கள் ஆனால் இன்று வரை உருப்படியாய் என்ன செய்தீர்கள்? ஐயா அகாசி சிங்கள பேரினவாத்துக்குத்தான் புரிய வில்லையென்றால் உங்களுக்குமா?

சு.ப.தமிழ்ச்செல்வன் தொடக்கம் தமிழ் கூட்டமைப்பு வரைக்கும் பெருமெடுப்பிலான வலிந்து தாக்குதலை சிறீலங்கா படைகள் மேற்கொள்ளப்போவதாக எச்சரித்தும் உங்களுடைய பதிற்குறி என்னவாயிற்று? நீங்கள் திரணியற்றவர்களா? அல்லது நாங்கள் திரணியற்றவர்கள் என்று எண்ணிவிட்டீர்களா?

ஐயா,உங்களுக்கான சந்தர்பங்கள் முடிவுக்கு வருவதற்கு மகிந்தர் முகூர்த்தம் பார்த்திட்டார். அதாவது உங்களுடய ஆட்டமும் தற்போதைக்கு முடிவுக்க வந்தாயிற்று. ஆனால் மகிந்தருக்கும் அவரது கூட்டணிக்கும் இன்னும் புரியவில்லை அவர்களிற்கும் அதுதான் நிலைமை என்று. அவர்களுக்கு இதனை தமிழ் மக்களின் சார்பில் புரியவைக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது.அப்போதுதான் அவர்களிற்கு வலிந்த தாக்குதலிற்கும் (Offensive attack),பதிற் தாக்குதலுக்கும் (Defensive attack) அர்த்தம் புரியும். அத்துடன் தமிழனின் உணர்வும்,எல்லை கடந்த பொறுமையுடன் காத்திருந்த புலிகளின் பாய்ச்சலின் வீச்சும் தெரியும்.

அதற்கான தேதி குறித்தாயிற்று நேரம்தான் மீதி. தமிழர் தலைவன் பிரபாகரனின் சுட்டும் விரல் அசைவிற்காய் காத்திருக்கின்றோம்.அவர் விரலசைவில் எங்கள் தாய்மண் இருள் விலகும். தமிழீழ தாயின் விழிகள் திறக்கும்.

“வேலும் உண்டு வெள்ளைக் கொடியும் உண்டு வேண்டியதை சிங்கள அரியணைக்கு நாம் கொடுப்போம்.”

நன்றி.

அன்புடன்,
சிவஒளி